தாலுகா அலுவலகம் முன்பு ஆடுகளுடன் விவசாயிகள் போராட்டம்


தாலுகா அலுவலகம் முன்பு ஆடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
x

ஒன்னாளியில் கோசாலை நிலத்திற்கு பட்டா கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகம் முன்பு ஆடுகளுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

சிக்கமகளூரு;

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா அரபகட்டே கிராமத்தில் சுமார் 231 ஏக்கரில் கோசாலை நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இந்த நிலையில் அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கந்தாயம் கட்டி வந்ததாக கூறப்படுகிறது.


இதனால் அவர்கள், நிலத்தை தங்களது பெயரில் பட்டா செய்து கொடுக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அரசு, பட்டா போட்டு கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோசாலை நிலத்தை பட்டா போட்டு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை ஒன்னாளி தாலுகா அலுவலகம் முன்பு கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை கொண்டுவந்து தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஆடுகள் அங்கும், இங்குமாக ஓடி திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது.


இதையறிந்த தாசில்தார் ரஸ்மி, போராட்டக்காரர்களை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டுவிட்டு விவசாயிகள், ஆடுகளை அழைத்துகொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story