பருத்தி குடோனில் தீவிபத்து; ரூ.8 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
மங்களூரு அருகே பருத்தி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
மங்களூரு;
பருத்தி குடோனில் தீவிபத்து
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நரிங்கானா கிராமத்தை சேர்ந்தவர் நவுமன். இவருக்கு நரிங்கானா கிராமத்தில் உள்ள தொடுகோலி கிராசில் பருத்தி குடோன் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு குடோனை பூட்டிவிட்டு நவுமன் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது நள்ளிரவு பருத்தி குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வாளியில் தண்ணீர் எடுத்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள், பாண்டேஸ்வர் தீயணைப்பு படையினருக்கும், குடோன் உரிமையாளர் நவுமனுக்கும் உடனடியாக தகவல் கொடுத்தனர்.
ரூ.8 லட்சம் பொருட்கள் நாசம்
அதன்பேரில் பாண்டேஸ்வர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் பருத்தி குடோன் உரிமையாளர் நவுமனும் வந்தார். பின்னர் தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். அதன்படி நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர்.
ஆனாலும் அதற்குள் குடோனில் இருந்த பருத்தி மூட்டை உள்ளிட்ட ெபாருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும். மின்கசிவால் பருத்தி குடோனில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்து குறித்து கோனஜே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.