உடுப்பியில் தனியார் கடைக்கு ரூ.1 கோடி மின் கட்டண ரசீது வழங்கிய மெஸ்காம் ஊழியரால் பரபரப்பு
உடுப்பி அருகே தனியார் கடைக்கு ரூ.1 கோடி மின் கட்டண ரசீது வழங்கிய மெஸ்காம் ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மங்களூரு-
உடுப்பி அருகே தனியார் கடைக்கு ரூ.1 கோடி மின் கட்டண ரசீது வழங்கிய மெஸ்காம் ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல தொடரும் குளறுபடியால் மின் வாரிய ஊழியர்கள் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ரூ.1 கோடி மின் கட்டணம்
உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் தனியாருக்கு சொந்தமான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கடைக்கு மின்சார பயன்பாடு குறித்து மெஸ்காம் தரப்பில் ரசீது ஒன்று வழங்கப்பட்டது. அந்த ரசீதை பார்த்து உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். அதாவது மாத மின் கட்டணமாக ரூ.1 கோடி வந்திருப்பதாக அந்த ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்து சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் உடனே மெஸ்காம் ஊழியர்களிடம் விசாரித்தார். அப்போது 1,574 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்தது. ஆனால் மெஸ்காம் ஊழியர்கள் தவறுதலாக 13 லட்சத்து 11 ஆயிரத்து 155 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக குறிப்பிட்டதாக தெரியவந்தது. அதன்படி இந்த 13 லட்சத்து 11 ஆயிரத்து 155 யூனிட் மின்சார பயன்பாடு மற்றும் அதற்கான வாட் வரியுடன் சேர்த்து, ரூ.1 கோடி மின் கட்டணம் வந்திருப்பதாக ரசீது வழங்கப்பட்டது.
மெஸ்காம் ஊழியர் அலட்சியம்
இது மெஸ்காம் ஊழியரின் அலட்சியபோக்கால் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது பெஸ்காம் ஊழியர்கள், மின் மீட்டரை அளவிடும்போது, கூடுதல் யூனிட்டை தட்டச்சு செய்ததாக தெரியவந்தது. இதனால் கூடுதல் மின் கட்டணம் வந்ததாக ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதை கேட்டு கோபமடைந்த கடையின் உரிமையாளர், உடனே சம்பந்தப்பட்ட மெஸ்காம் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் மற்றும் வேறு மின் கட்டண ரசீது வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற பெஸ்காம் அதிகாரிகள் உடனே அவருக்கு புதிய ரசீதை வழங்கினர். அதில் வழக்கமான மின் கட்டணம் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடை உரிமையாளர் சமாதானம் அடைந்தார்.
தொடரும் குளறுபடி
இதேபோல உல்லால்பையிலுவில் ஒருவருக்கு ரூ.3 ஆயிரம் மின் கட்டணத்திற்கு பதிலாக ரூ.7.71 லட்சம் மின் கட்டண ரசீது வழங்கியுள்ளனர். குந்தாப்புராவில் 2 யூனிட் பயன்படுத்தியவருக்கு ரூ.1000 மின் கட்டணம் வந்திருப்பதாக ரசீது வழங்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், மெஸ்காம் அதிகாரிகளுக்கு புகார் அளித்த பின்னர் புதிய மின் கட்டண ரசீது வழங்கப்பட்டது.
இதேபோல தொடர்ந்து நடைபெறும் மின் கட்டண குளறுபடியால் மின்சாரத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். வரும் நாட்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறகூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.