பண்ட்வால் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை
பண்ட்வால் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்களூரு
மாணவிக்கு பாலியல் தொல்லை
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா பகுதியை சேர்ந்தவர் முகமது நவ்ஷத் (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கொடங்காய் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
இவரது வீட்டின் அருகே 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறாள்.
இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுமிக்கும், நவ்ஷத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிைலயில் நேற்று முன்தினம் நவ்ஷத் அந்த சிறுமியை ஏமாற்றி உல்லால் கடற்கரைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டிற்கு திரும்பும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
வாலிபருக்கு வலைவீச்சு
இந்தநிலையில் சிறுமி பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தேடி அலைந்தனர். இந்தநிலையில் மாலையில் சிறுமி வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அதற்கு சிறுமி வாலிபர் நவ்ஷத்துடன் சென்றதாகவும், வரும் வழியில் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சிறுமி கூறினார்.
இதை கேட்ட பெற்றோர் உடனே விட்டலா போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது நவ்ஷத் சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விட்டலா போலீசார் நவ்ஷத் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக நவ்ஷத்தை போலீசார் தேடி வருகின்றனர்.