அரசு ஆஸ்பத்திரியைதிறந்து வைத்த சி.டி.ரவி எம்.எல்.ஏ.
இரேமகளூரில் தனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆஸ்பத்திரியை சி.டி.ரவி எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார்.
சிக்கமகளூரு-
அரசு ஆஸ்பத்திரி
சிக்கமகளூரு அருகே இரேமகளூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி குறைபாடு உள்பட ஏராளமான வசதிகள் குறைபாடு இருந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அரசு மற்று தனியார் பங்களிப்புடன் ரூ.2 கோடி செலவில் அந்த ஆஸ்பத்திரி புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று புதுப்பிக்கப்பட்ட ஆஸ்பத்திரியின் திறப்பு விழா நடந்தது. விழாவில் பா.ஜனதாவின் தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
தனியார் பங்களிப்புடன் இந்த ஆஸ்பத்திரி புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் தற்போது குறிப்பிட்ட சில உயர் சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை நோயாளிகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா அரசு நடவடிக்கை
அதையடுத்து அவர் அதே பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டார். அப்பகுதியில் சாலை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அவர் உத்தரவிட்டார். பின்னர் அவர் பேசுகையில், 'மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ. மகனின் வீட்டில் இருந்து ரூ.8 கோடியை லோக் அயுக்தா அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இது கட்சி பாகுபாடின்றி யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இதே காங்கிரசாக இருந்தால் தங்கள் கட்சியினரை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்' என்றார்.