அரசு பள்ளி ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7½ லட்சம் அபேஸ்; மர்ம நபருக்கு வலைவீச்சு
புத்தூர் அருகே வங்கி அதிகாரி போல் பேசி அரசு பள்ளி ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ,7½ லட்சம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மங்களூரு;
அரசு பள்ளி ஆசிரியை....
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா நெல்யாடி கிராமத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், அதேப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஆசிரியையின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் எதிர்முனையில் பேசிய நபர் தான் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி அதிகாரி பேசுவதாகவும், உங்களது ஏ.டி.எம். காா்டு காலாவதி ஆகிவிட்டது, அதனால் அதனை புதுப்பிக்க வங்கிக்கணக்கு மற்றும் ஏ.டி.எம்.கார்டு விவரங்களை தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஆசிரியையும், அந்த நபரிடம் வங்கி கணக்கு, ஏ.டி.எம்.கார்டு விவரங்களை கூறியுள்ளார். மேலும் அதைதொடர்ந்து வந்த ஓ.டி.பி. எண்ணையும் கூறிவிட்டு செல்போனை வைத்துள்ளார்.
ரூ.7½ லட்சம் அபேஸ்
இதையடுத்து சிறிதுநேரத்தில் அவரின் வங்கி கணக்கில் இருந்து பல தவணைகளாக ரூ.7.47 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுபற்றி வங்கி அதிகாரி போல் பேசியவரிடம் கேட்க அவரை செல்போனில் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றார்.
ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாக வந்தது. அப்போது தான் அவருக்கு, மர்மநபர் வங்கி அதிகாரி போல் பேசி வங்கிக்கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆசிரியை, புத்தூர் சைபா் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.