பெங்களூருவில் கை, கால்களை கட்டிப்போட்டு தொழில்அதிபர் படுகொலை


பெங்களூருவில் கை, கால்களை கட்டிப்போட்டு தொழில்அதிபர் படுகொலை
x

பெங்களூருவில் கை, கால்களை கட்டிப்போட்டு தொழில்அதிபரை கொன்று நகை- பணத்தை கொள்ளையடித்த ராஜஸ்தானை சேர்ந்த வேலைக்காரர் தப்பிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மாவட்ட செய்திகள்

பெங்களூரு:

பெங்களூருவில் கை, கால்களை கட்டிப்போட்டு தொழில்அதிபரை கொன்று நகை- பணத்தை கொள்ளையடித்த ராஜஸ்தானை சேர்ந்த வேலைக்காரர் தப்பிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தொழில்அதிபர் படுகொலை

பெங்களூரு சாம்ராஜ்நகர் 4-வது பிளாக், 4-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டின் 3-வது தளத்தில் வசித்து வந்தவர் ஜக்குராஜ் ஜெயின் (வயது 74). தொழில்அதிபரான இவர், சிக்பேட்டையில் எலெக்ட்ரீக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். ஜக்குராஜின் மகன் பிரகாஷ் சந்த். இவர், அதே பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலையில் நீண்ட நேரமாக ஜக்குராஜ் வசித்து வந்த வீட்டுக்கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இதுபற்றி பிரகாஷ் சந்த் மற்றும் உறவினர்கள் சாம்ராஜ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்குள்ள படுக்கை அறையில் கை, கால்கள் கட்டப்பட்டு ஜக்குராஜ் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்கள். மேலும் ஜக்குராஜின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரிந்தது.

வேலைக்காரர் தப்பி ஓட்டம்

ஜக்குராஜ் வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. அதே நேரத்தில் வேலைக்காரரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிஜாராம் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பிஜாராமை தனது தந்தைக்கு தேவையான உதவிகளை செய்ய பிரகாஷ் சந்த் வேலைக்கு சேர்த்துள்ளார். அதன்படி, ஜக்குராஜிக்கு தேவையான உதவிகளையும், வீட்டு வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

இதையடுத்து பிஜாராம், வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் ஜக்குராஜின் கை, கால்களை கட்டியும், அவரது கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து சாம்ராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள வேலைக்காரர் பிஜாராமை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொலை சம்பவம் சாம்ராஜ்பேட்டையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story