சிவமொக்காவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை


சிவமொக்காவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
x
மாவட்ட செய்திகள்

சிவமொக்கா,

வெளுத்து வாங்கும் கனமழை

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை மழை கொட்டி வருகிறது. மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உஷ்ணமான நிலை மாறி குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மலைநாடு மாவட்டமான சிவமொக்காவிலும் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடி-மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டுவதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடிய, விடிய கனமழை

மேலும் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்களும், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று காலை வரை விடிய, விடிய கொட்டி தீர்த்தது.

இந்த கனமழையால் சிவமொக்கா நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தப்படி செல்கின்றன. குடியிருப்பு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்துகொண்டது. மொத்தம் 50 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த கனமழையால் சிவமொக்கா நகரில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஈசுவரப்பா ஆய்வு

இந்த நிலையில் சிவமொக்கா நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முன்னாள் மந்திரி ஈசுவரப்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தண்ணீர் சூழ்ந்துகொண்ட பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிக்கு மாற்றும்படியும் உத்தரவிட்டார்.

சிவமொக்கா நகரில்குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

துங்கா அணையில் தண்ணீர் திறப்பு

சிவமொக்கா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல், சிவமொக்கா நகரையொட்டி காஜனூர் பகுதியில் அமைந்துள்ள துங்கா அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. இதன்காரணமாக அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று 5 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 590 அடி கொள்ளளவு கொண்ட துங்கா அணையில் தற்போது 588.24 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 9,900 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் துங்கா ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story