பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளருக்கு எதிராக போராட்டம்: பல இடங்களில் வன்முறையால் பதற்றம்


பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளருக்கு எதிராக இன்று நடத்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில் பங்கேற்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த கருத்தை தொடர்ந்து பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது. பாஜகவை சேர்ந்த நவீன் ஜீண்டாலையும் பாஜக கட்சியில் இருந்து நீக்கியது. நுபுர் சர்மா, நவீன் ஜீண்டால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத கடவுளின் இறை தூதரை அவமதித்ததாக கூறியும் பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்த கோரியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மதியம் (வெள்ளிக்கிழமை) மத வழிபாட்டை முடித்துவிட்டு மத வழிபாட்டு தலத்தில் இருந்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், ஜார்க்கண்ட், மராட்டியம் என நாட்டின்பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுக்க முயன்றதால் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். மேலும், கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

சாலைகளை மறித்தும், வாகனங்களுக்கு தீ வைத்தும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வன்முறை மேலும் பரவாமல் இருக்க மாநில அரசுகள் விழிப்புடன் இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story