பிரதமர் மோடி வருகையையொட்டி, மைசூருவில் ஏற்பாடுகள் தீவிரம்


பிரதமர் மோடி வருகையையொட்டி, மைசூருவில் ஏற்பாடுகள் தீவிரம்
x

பிரதமர் மோடி வருகையையொட்டி மைசூருவில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மைசூரு: பிரதமர் மோடி வருகையையொட்டி மைசூருவில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பிரதமர் மோடி வருகை

யோகா தினம் வருகிற 21-ந் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற மைசூரு அரண்மனையில் ஒவ்வொரு வருடமும் யோகா தினத்தன்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு மைசூரு அரண்மனையில் நடைபெறும் யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்.

அன்றைய தினம் காலை 6.30 மணியிலிருந்து 7.45 மணி வரை பிரதமர் நரேந்திர மோடி அரண்மனை வளாகத்தில் நடைபெறும் யோகா பயிற்சியில் கலந்து கொள்கிறார். இதில் சுமார் 10 முதல் 15 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர்.

மின்விளக்கு அலங்காரம்

இந்த நிலையில் பிரதமர் வருகையையொட்டி மைசூரு நகரம் இப்போதே விழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. மைசூருவில் உள்ள சாலைகள், பூங்காக்களை அழகுபடுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. மைசூரு டவுனில் உள்ள சாலைகளும், பிரதமர் மோடி தங்கும் ஓட்டலில் இருந்து அரண்மனை வரை உள்ள சாலைகளும், மைசூரு மண்டகள்ளி விமான நிலையம், லலித் மகால் பேலஸ் ஓட்டல் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

அங்கு மின்விளக்கு அலங்காரமும் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முக்கிய சாலைகளில் இருபக்கங்களிலும் தடுப்பு சுவர் கட்டும் பணியும் நடந்து வருகிறது. சாலைகள் சீரமைப்பு பணிக்காக மரங்களும் வெட்டப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

பிரதமர் மோடி எப்போது வருவார், எங்கு தங்குவார் என்பன உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. அதுபற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவர் லலிதா பேலஸ் அல்லது ரேடிசன் புளூ நட்சத்திர ஓட்டலில் தங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமர் மோடி வருவதற்கு முன்னதாக கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மந்திரிகள், அரசியல் தலைவர்கள் மைசூருவுக்கு வந்து தங்க திட்டமிட்டுள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி இப்போதிருந்தே மைசூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


Next Story