நாட்டில் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி அனோகோவேக்ஸ் அறிமுகம்


நாட்டில் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி அனோகோவேக்ஸ் அறிமுகம்
x
தினத்தந்தி 10 Jun 2022 2:51 AM GMT (Updated: 10 Jun 2022 2:54 AM GMT)

இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டில் தயாரான விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி மத்திய மந்திரியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,



நாட்டில் கொரோனா பெருந்தொற்றால் பொதுமக்கள் 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுவரை இந்தியாவில் 3 கொரோனா அலைகள் கடந்து சென்று விட்டன.

ஜூலை மத்தியில் 4வது அலை உச்சம் பெற கூடும் என்று நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டு உள்ளனர். இதனால், தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மனிதர்களை தவிர சிங்கம், புலி உள்ளிட்ட சில விலங்குகளுக்கும் கடந்த காலத்தில் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.

இந்நிலையில், அரியானாவை அடிப்படையாக கொண்ட தேசிய ஆராய்ச்சி மையம் ஒன்று விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இதில் வெற்றியும் அடைந்துள்ளது.

இதன்படி, இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டில் தயாரான விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசியானது டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனாவை அழிக்கும் திறன் படைத்த நோயெதிர்ப்பு ஆற்றலை கொண்டது என இந்திய வேளாண் ஆய்வு கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

தடுப்பூசியில் அல்ஹைட்ரோஜெல் என்ற உபபொருளுடன் ஆன்டிஜெனும் உள்ளது. நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைப்புலிகள், எலிகள் மற்றும் முயல்கள் ஆகியவற்றுக்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் அவர் பேசும்போது, விஞ்ஞானிகள் அயராமல் பங்காற்றியதன் விளைவாக, நாடு தனது தடுப்பூசிகள் தயாரிப்பில், இறக்குமதிக்கு பதிலாக சுய சார்புடன் நிற்கிறது. இது உண்மையில் மிக பெரிய சாதனை என தெரிவித்து உள்ளார்.




Next Story