யானைகளை தடுக்க 311 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு வேலி -மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே தகவல்


யானைகளை தடுக்க 311 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு வேலி -மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 4:28 PM IST)
t-max-icont-min-icon

யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க ரூ.500 கோடியில் 311 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு வேலி அமைக்கப்படும் என்று வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே கூறியுள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே பெங்களூருவில் நேற்று வனத்துறையின் லோகோவை (இலச்சினை) வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நில அளவீட்டாளர்கள்

கர்நாடகத்தில் ஒருபுறம் வனத்தை காக்க வேண்டும். மற்றொருபுறம் வன நிலத்தில் சிறிய அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் நலனை காக்க வேண்டியதும் அவசியம். வனம் என்று அடையாளம் காணப்பட்ட நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது. இதில் யார் தலையிட்டாலும் எடுபடாது. வன நில சிக்கல்களுக்கு தீர்வு காண வருவாய்த்துறை மற்றும் வனத்துறை இணைந்து சர்வே நடத்துவது மட்டுமே தீர்வு.

சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு வருவாய்த்துறையுடன் ஆலோசனை நடத்துவேன். சர்வே பணிகளை முடிக்க 6 மாதங்கள் ஆகும். அந்த சர்வே அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும். நில அளவீட்டாளர்கள் பற்றாக்குறையை போக்க தனியார் நில அளவீட்டாளா்களை பயன்படுத்துவோம். வன நிலம் தொடர்பாக கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

யானைகள் தாக்குதல்

அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நில அளவீட்டு பணிகள் மிக துல்லியமாக மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வனப்பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அவற்றில் 50 சதவீத மரக்கன்றுகள் நாசமாகிவிடுவதாக சொல்கிறார்கள். இனி மரக்கன்றுகளை நட்டு அவற்றை பாதுகாக்க தேவையான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் நடப்பட்ட மரக்கன்றுகளின் நிலை குறித்து அறிக்கை பெற்று அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகத்தில் யானைகள் தாக்குதலில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். நான் வனத்துறை மந்திரியாக வந்த பிறகு 3 பேர் இறந்துள்ளனர். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் 641 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரெயில்வே தண்டவாள வேலி போட முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு செலவு அதிகமாகும் என்பதால் இந்த திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

அரசுக்கு வரைவு திட்டம்

மாநில அரசே தனது சொந்த செலவில் காடுகளில் 330 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு வேலி போட்டுள்ளது. இதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1½ கோடி செலவாகிறது. மீதுமுள்ள 311 கிலோ மீட்டர் தூரத்திற்கு வேலி அமைக்க ரூ.500 கோடி தேவைப்படுகிறது. இதில் முதல் கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்குமாறு கோரி அரசிடம் வரைவு திட்டம் வழங்கப்படும்.

3 ஆண்டுகளில் வேலி அமைக்கும் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது மட்டுமின்றி வனங்களை பாது

காப்பதும் முக்கியமானது. வனத்துறையில் 335 காலியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் இதற்கான நியமன பணிகள் தொடங்கும்.

இவ்வாறு ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.

யானைகள் தடுப்பு செயல்படைகள் இன்று தொடக்கம்

பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மந்திரி ஈஸ்வரன் கன்ட்ரே கூறுகையில், கர்நாடகத்தில் யானைகள் ஊருக்குள் வந்தவுடன் அவற்றை விரட்டியடிக்கும் பணிகளை தொடங்கும் நோக்கத்தில் சிக்கமகளூரு, மடிகேரி, ஹாசன், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட 5 இடங்களில் யானைகள் தடுப்பு செயல்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தகைய செயல்படைகள் பெங்களூரு புறநகர் மற்றும் ராமநகரிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்படைகள் நாளை (அதாவது இன்று) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த படையில் 40 பேர் இருப்பார்கள். இந்த படைகளுக்கு தலா 4 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.


Next Story