கர்நாடக சட்டசபை தேர்தல்: பெங்களூருவில் 26½ கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் பிரதமர் மோடி ஊர்வலம்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி பெங்களூருவில் 26½ கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் நடத்தி ஓட்டு சேகரித்தார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் வருகிறது. தேர்தல் களத்தில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் உள்ளனர். இந்த தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவர் இதுவரை 6 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று 6-வது நாளாக பிரசாரம் நடத்தினார். பிரதமர் மோடி பெங்களூருவில் 26½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலம் நடத்தினார்.
பெங்களூருவின் தெற்கு தொகுதியில் அமைந்துள்ள ஆர்.பி.ஐ. லே-அவுட்டில் உள்ள சோமேஸ்வரா பவனில் இருந்து காலை 10.30 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, குண்டு துளைக்காத திறந்தவெளி காரில் அவர் நின்றபடி சாலையின் இருபுறத்திலும் குவிந்திருந்த பா.ஜனதா தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். அந்த கார் காவி நிறத்தில் இருந்தது. அதில் மோடியின் புகைப்படம் மற்றும் பா.ஜனதாவின் சின்னம் அச்சிடப்பட்டு இருந்தது.
ஜே.பி.நகர், ஜெயநகர் சவுத் என்ட் சர்க்கிள், மாதவராவ் சர்க்கிள், ராமகிருஷ்ணா ஆசிரமம், உமா தியேட்டர் சர்க்கிள், மைசூரு சிக்னல், டோல்கேட் சிக்னல், கோவிந்தராஜ்நகர், மாகடி ரோடு சந்திப்பு, சங்கர் மட சர்க்கிள், மல்லேஸ்வரம் சர்க்கிள், சம்பிகே ரோடு 18-வது கிராஸ் சந்திப்பு வழியாக சாங்கி டேங்க் ஏரிக்கரையில் மதியம் 1.30 மணியளவில் ஊர்வலம் நிறைவடைந்தது. இந்த ஊர்வலம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. சாலையில் இருபுறமும் குவிந்திருந்த பா.ஜனதா தொண்டர்கள் மோடியின் மீது பூக்களை தூவினர். இதனால் அவரது கார் பூக்களால் மூடப்பட்டு இருந்தது.
அந்த தொண்டர்கள் ஜெய் பஜ்ரங்பாலி என்றும், பாரத் மாதாகி ஜெய் என்றும் முழக்கமிட்டனர். பிரதமர் மோடி தனது வழக்கமான உடையுடன் தலையில் காவி நிற தொப்பி அணிந்திருந்தார். காரில் பிரதமர் மோடியுடன் எம்.பி.க்கள் தேஜஸ்வி சூர்யா, பி.சி.மோகன் ஆகியோர் இருந்தனர். மேலும் மோடியை சுற்றிலும் அவரது பாதுகாப்பு படையினர் நின்றிருந்தனர். அவரை காரை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்திய நிலையில் நடந்து வந்தனர். பிரதமரின் காரை பின்தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்பு வாகனங்கள், டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை உள்ளடக்கிய சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் அணிவகுத்து வந்தன.
மோடியின் ஊர்வலத்தையொட்டி அவர் பயணித்த 35 சாலைகள் காலை முதலே மூடப்பட்டது. அந்த சாலைகளில் வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த சாலைகளின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு, அதன் மீது கவி நிற கொடி கட்டப்பட்டு இருந்தது. அந்த இரும்பு தடுப்புகளுக்கு அப்பால் தொண்டர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
அசம்பாவித சம்பவங்களை தடுக்க சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த ஊர்வலம் நடைபெற்ற சாலையில் கட்டிடங்களில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கட்டிடத்தின் மீதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடங்கள் மீது நிற்கவோ, கட்டிடங்களின் கதவை திறக்கவே, உள்ளே செல்லவோ போலீசார் தடை செய்திருந்தனர்.