கேரளாவில் அரசு நிறுவனங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை
அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கொச்சி,
அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
மாநில உயர்கல்வித் துறை, இன்று பிறப்பித்த உத்தரவில், பல்கலைக்கழக விதிகளின் கீழ் 75 சதவீத வருகைக்கு பதிலாக 73 சதவீத வருகையுடன் மாணவிகள் தங்கள் செமஸ்டர் தேர்வில் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவிகளும் 60 நாட்கள் வரை பேறுகால விடுப்பு பெறலாம் என்றும் கூறியுள்ளது.
முன்னதாக ஜனவரி 16 அன்று, உயர்கல்வி மற்றும் சமூக நீதிக்கான மாநில அமைச்சர் ஆர். பிந்து, வெளியிட்ட பேஸ்புக் பதிவில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (குசாட்) மாதவிடாய் விடுமுறையை அமல்படுத்திய மாநிலத்தின் முதல் கல்வி நிறுவனம் என்று பாராட்டியிருந்தார். இதேபோன்ற கொள்கையை மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் அறவித்திருந்தார்.
இங்கிலாந்து, சீனா, இந்தோனேஷியா, ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுமுறைகளுக்கான ஏற்பாடுகள் உள்ளன. மேலும், 1992 முதல் பீகாரில் அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் சிறப்பு மாதவிடாய் விடுப்பு பெறலாம்.