மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை; உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு


மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை;  உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு
x

புத்தூர் அருகே சுப்பிரமணியா பகுதியில் மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

மங்களூரு;

மூதாட்டி

உடுப்பி மாவட்டம் புத்தூர் அருகே சுப்பிரமணியா பகுதியில் வசித்து வந்தவர் ரத்னாவதி ஷெட்டி(வயது 80). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் தங்கள் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். ரத்னாவதி ஷெட்டியின் கணவரும் இறந்துவிட்டார். இதனால் அவர் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவரது வீட்டில் உள்ள ஒரு அறையை அவர் வாடகைக்கு விட முடிவு செய்தார்.அதன்படி தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா நலகுண்டா கிராமத்தைச் சேர்ந்த அம்பண்ணா என்ற அம்பரீஷ், அவரது மனைவி ரஷீதா என்ற ஜோதி ஆகியோர், ரத்னாவதி ஷெட்டியின் வீட்டுக்கு குடி வந்தனர்.


படுகொலை

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த ரத்னாவதி ஷெட்டியை, அம்பண்ணா-ரஷீதா தம்பதி ஜோடி கத்தியால் குத்தி படுகொலை செய்து, நகைகள், பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதுபற்றி ரத்னாவதியின் மகள் சுப்ரபா சுப்பிரமணியா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று ரத்னாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரத்னாவதியை கொலை செய்தது அம்பண்ணா - ரஷீதா தம்பதி என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைப்பு

மேலும் அவர்கள் மீது உடுப்பி மாவட்ட 2-வது கூடுதல் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் குற்றவாளிகளான அம்பண்ணா, ரஷீதா ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து அம்பண்ணா உடுப்பி மாவட்ட மத்திய சிறையிலும், ரஷீதாவை பெண்கள் சிறையிலும் போலீசார் அடைத்தனர்.


Next Story