மழை பெய்ய வேண்டி கே.ஆர்.எஸ். அணையில் சிறப்பு பூஜை


மழை பெய்ய வேண்டி கே.ஆர்.எஸ். அணையில் சிறப்பு பூஜை
x

மழை பெய்ய வேண்டி நேற்று கே.ஆர்.எஸ். அணையில் அர்ச்சகர்கள் ‘கங்கா ஸ்நானம்’ செய்து வழிபாடு நடத்தினர்.

பெங்களூரு:

கே.ஆர்.எஸ். அணை

கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளில் கிருஷ்ணராஜசாகர் எனும் கே.ஆர்.எஸ். அணையும் ஒன்று. இந்த அணை மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கண்ணம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது. காவிரியின் குறுக்கே அமைந்துள்ளதால் இந்த அணை, பெங்களூரு, மைசூரு உள்பட 6 மாவட்ட மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

மேலும் இந்த அணையை மையமாக கொண்டு தான் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் இந்த அணை கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த விவசாயிகளின் பாசன தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

சரிந்து வரும் நீர்மட்டம்

இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக கேரள மாநிலம் வயநாடும், குடகு மாவட்டமும் திகழ்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியும் இன்னும் மழைபெய்யவில்லை.

இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து இல்லை. மேலும் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

குறைந்தது

வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில், தென்மேற்கு பருவமழையும் இன்னும் தொடங்காததால், கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 83 அடியாக (மொத்த கொள்ளளவு 124.80 அடி) குறைந்தது. இதையடுத்து ஹாசனில் உள்ள ஹேமாவதி அணையில் இருந்து கே.ஆர்.எஸ். அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தற்போது கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 81 அடியாக உள்ளது.

அதாவது 12.181 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் இருப்பு உள்ளது. இதனால் பெங்களூரு, மைசூரு, ராமநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளும் பாசனத்திற்கு நீர் கிடைக்காதோ என்ற கவலையில் உள்ளனர்.

சிறப்பு பூஜை

எனவே மழை பெய்து கே.ஆர்.எஸ். அணை நிரம்ப வேண்டி கே.ஆர்.எஸ். அணையில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இந்த சிறப்பு பூஜை காவிரி நீர்ப்பாசன கழகம் சார்பில் நடத்தப்பட்டது. நேற்று காலையில் கே.ஆர்.எஸ். அணையில் உள்ள காவிரி தாய்க்கும், வருணபகவானுக்கும் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஹோமம், யாகம், கங்கா பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இந்த சிறப்பு பூஜையை பானுபிரகாஷ் ஷர்மா தலைமையில் 12 அர்ச்சகர்கள் நடத்தினர். கங்கா பூஜையின்போது 3 பெரிய தண்ணீர் பாத்திரங்களில் 3 அர்ச்சகர்கள் தனித்தனியாக அமர்ந்து மழை பெய்ய வேண்டி வருணபகவானுக்கும், காவிரி தாய்க்கும் 'கங்கா ஸ்நானம்' செய்தனர்.

அபிஷேகம்

முன்னதாக காவிரித்தாய் சிலைக்கு கலச ஸ்தாபனம், மகா கணபதி பூஜை, புண்ணியஹாதி, ஆதித்யா பூஜை, மழை தேவதைகளுக்கான பூஜை ஆகியவற்றை நிறைவேற்றி ருத்ராபிஷேகம் நடத்தினர். பின்னர் மூலமந்திரங்கள் ஓதி அணையின் நீரில் பூஜை பொருட்கள் வீசப்பட்டு பாகினா சமர்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த நூதன வழிபாட்டில் ரமேஷ் பண்டி சித்தேகவுடா எம்.எல்.ஏ. மற்றும் காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story