குமாரசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு தனியார் மருத்துவமனையில் அனுமதி


குமாரசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு தனியார் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:45 PM GMT)

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் பெங்களூருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு:-

குமாரசாமிக்கு உடல்நலக்குறைவு

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி (வயது 63). ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரான இவர், அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவின் 2-வது மகன் ஆவார்.

இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த குமாரசாமிக்கு நேற்று அதிகாலை 3.40 மணி அளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அதாவது அவர் காய்ச்சல், உடல் சோர்வு, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் குடும்பத்தினர் அவரை உடனடியாக ஜெயநகர் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு டாக்டா்கள் சிகிச்சை அளித்தனர்.

2 முறை இதய அறுவை சிகிச்சை

மேலும் அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரை அவரது மனைவி அனிதா குமாரசாமி, மகன் நிகில் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள்.

குமாரசாமிக்கு ஏற்கனவே 2 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. குமாரசாமி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டதால் அவரது கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலை அடைந்தனர்.

மருத்துவ அறிக்கை

இந்த நிலையில் குமாரசாமியின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று மதியம் மருத்துவ அறிக்கை ஒன்று வெளியிட்டது. அந்த மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று (அதாவது நேற்று) அதிகாலை 3.40 மணியளவில் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல்நிலை சீராக இருக்கிறது

அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நன்றாக உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் சதீஸ்சந்திரா தலைமையிலான குழுவினர், குமாரசாமிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்'.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு பயணம்

இந்த மாதம் தொடக்கத்தில் குமாரசாமி ஐரோப்பிய நாடுகளுக்கும், கம்போடியாவுக்கும் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று இருந்தார். அவர் சுற்றுலாவை முடித்துக் கொண்டு சமீபத்தில் தான் பெங்களூரு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story