திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா தேர்வு: நாளை பதவியேற்கிறார்
திரிபுராவில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது. முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக் சகா நாளை பதவியேற்கிறார்.
அகர்தலா,
60 இடங்களை கொண்ட திரிபுரா சட்டசபைக்கு கடந்த மாதம் 16-ந் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் பா.ஜ.க. 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. பா.ஜ.க.வின் கூட்டணிக்கட்சியான ஐ.பி.எப்.டி. கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரிபுராவின் முதல்-மந்திரியாக இருந்து வந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான மாணிக் சகா மீண்டும் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் திடீர் குழப்பம் ஏற்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் ஒரு தரப்பினர் மத்திய பெண் மந்திரி பிரதிமா பவுமிக்கை புதிய பிரதமராக தேர்வு செய்ய வேண்டும் குரல் எழுப்பியதால் இந்த குழப்பம் உருவானது.
அதை தொடர்ந்து, இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா நேற்று முன்தினம் திரிபுரா விரைந்தார். அவர் எம்.எல்.ஏ.க்களிடம் பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை திரிபுரா தலைநகர் அகர்தலாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் மாணிக் சகாவை புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்ய ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் மோடி பங்கேற்கிறார்
நாளை அகர்தலாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் மாணிக் சகா திரிபுராவின் முதல்-மந்திரியாக பதவியேற்கவுள்ளார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.