பிரதமர் மோடி முன்னிலையில் திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா பதவியேற்பு


பிரதமர் மோடி முன்னிலையில் திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா பதவியேற்பு
x

திரிபுரா முதல்-மந்திரியாக 2-வது தடவையாக மாணிக் சகா பதவி ஏற்றார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அகர்தலா,

கடந்த மாதம் நடந்த திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மேகாலயாவில் அதிக இடங்களை பிடித்துள்ள தேசிய மக்கள் கட்சியுடன் சேர்ந்து பா.ஜனதா ஆட்சியில் இடம்பெற்றுள்ளது.

நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் முதல்-மந்திரிகள் பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. அவற்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

திரிபுரா

இந்தநிலையில், திரிபுராவில் மாணிக் சகா நேற்று 2-வது தடவையாக முதல்-மந்திரி ஆனார். அவரது பதவி ஏற்பு விழா, தலைநகர் அகர்தலாவில் உள்ள விவேகானந்தா மைதானத்தில் நடந்தது.

அங்கு மாணிக் சகாவுக்கு கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாணிக் சகாவுடன் 8 கேபினட் மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அவர்களில் 4 பேர் புதுமுகங்கள், 4 பேர் முந்தைய மந்திரிசபையில் இடம்பெற்றவர்கள். ரத்தன்லால் நாத், பிரணஜித் சிங்கராய், சந்தன சாக்மா, சுஷாந்தா சவுத்ரி ஆகியோர் பழைய மந்திரிகள் ஆவர். டிங்கு ராய், பிகாஷ் தெப்பர்மா, சுக்லா சரண் நவோடியா, சுதன்சு தாஸ் ஆகியோர் மந்திரி பதவிக்கு புதியவர்கள். இவர்களில் முதல் 3 பேர், முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆகி இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி

பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, அருணாசலபிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு, சிக்கிம் முதல்-மந்திரி பிரேம்சிங் தமங், மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன்சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

பின்னர், முதல்-மந்திரி மாணிக் சகா நிருபர்களிடம் கூறியதாவது:-

எந்த அரசியல் கண்ணோட்டமும் இன்றி திரிபுராவை வளர்ச்சி அடையச் செய்ய உறுதி பூண்டுள்ளேன். பிரதமர் மோடி வழிகாட்டுதலுடன் திரிபுராவை முன்மாதிரி மாநிலம் ஆக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பல் அறுவை நிபுணர்

மாணிக் சகா, பல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து அரசியலுக்கு வந்தவர். கடந்த ஆண்டு மே மாதம், உட்கட்சி மோதல் காரணமாக, முதல்-மந்திரியாக இருந்த பிப்லப்குமார் நீக்கப்பட்டார். அப்போது, முதல் முறையாக மாணிக் சகா முதல்-மந்திரி ஆனார்.

நேற்று முன்தினம் நாகாலாந்து, மேகாலயா முதல்-மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அன்று இரவு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை அங்கு மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர், விமானம் மூலம் திரிபுரா புறப்பட்டு சென்றார். அவரை கவர்னர் குலாப்சந்த் கட்டாரியா, முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.


Next Story