மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்ய வாய்ப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்ய வாய்ப்புள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
புதுடெல்லி,
டெல்லி ஆயத்தீர்வை கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து கவர்னர் வி.கே.சக்சேனா, நேற்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனால், ஆயத்தீர்வை துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான ஒரு வழக்கு, சி.பி.ஐ.க்கு சென்றுள்ளது. அந்த வழக்கில் அவரை சில நாட்களில் கைது செய்யப்போகிறார்கள். அது ஒரு பொய் வழக்கு. உண்மை சிறிதும் இல்லாதது. அது கோர்ட்டில் நிற்காது. மணீஷ் சிசோடியா, நேர்மையான மனிதர். அவரை 22 ஆண்டுகளாக எனக்கு தெரியும். அவர் நிரபராதியாக வருவார்.
ஆம் ஆத்மி தலைவர்கள் ஜெயிலுக்கு போவதை பற்றி பயப்படவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் கூறினார்.