காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சந்திப்பு?; குமாரசாமி பதில்
கர்நாடக மேல்-சபை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியினரையோ, சோனியா காந்தியையோ சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று குமாரசாமி பதில் அளித்துள்ளார்.
உப்பள்ளி;
உடல்நலம் பாதிப்பு
கர்நாடக மேல்சபை தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உப்பள்ளியில் சுற்றுபயணம் செய்தார். அப்போது நிருபர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
கர்நாடக மேல்-சபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதில் ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளரின் வெற்றிக்காக நான் காங்கிரஸ் கட்சியினரையோ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்களிடம் 34 வாக்குகள் உள்ளன.
மேல்-சபையில் வெற்றி பெறும் எங்கள் கட்சியினர் சிறப்பாக செயல்படுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதையாரும் நம்ப வேண்டாம். அவர்கள் ஜனதா தனம் (எஸ்) கட்சியை அழிக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. எனக்கு லேசான உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் நான் சிங்கப்பூர் வரை சென்று வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக குமாரசாமி தார்வாருக்கு சென்றார். அங்கு கர்நாடக பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்திய ஒப்பந்த பேராசிரியர்களை சந்தித்து, அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். அப்போது அவரை சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் சந்தித்தனர். பின்னர் அவர்கள் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டால் 5 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என கூறினர்.
முற்றுகை....
அப்போது அதற்கு பதில் அளித்த குமாரசாமி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டால் 5 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படவில்லை. வெறும் 545 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அவரை முற்றுகையிட்டனர். பாதுகாவலாளிகள் மற்றும் போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து குமாரசாமி காரில் ஏறி புறப்பட்டார்.
அப்போது அங்கு நின்றவர்கள் குமாரசாமிக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.