கேரளாவில் கண்ணில் மிளகாய் பொடி தூவி மகனை கொடுமை படுத்திய தாய் கைது ...!
கேரளாவில் 7 வயது மகனுக்கு கை. கால்களில் சூடு வைத்து, கண்களில் மிளகாய் பொடி தேய்த்து கொடுமைப்படுத்திய தாயை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமளி அருகே அட்டப்பள்ளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் தனது பக்கத்து வீட்டிலிருந்து டயர் ஓன்றை எடுத்து வந்து வீட்டின் வயலில் வைத்து எரித்துள்ளான். இதனை பார்த்த சிறுவனின் தாயார் குழந்தையை அடித்ததுடன் தோசை கரண்டியை அடுப்பில் காய வைத்து கை மற்றும் கால்களில் சூடு வைத்துள்ளார்.
மேலும் சிறுவனின் கண்ணில் மிளகாய் கொடியை தூவியதால் வலி தாங்க முடியாத சிறுவன் கூச்சல் போட்டிருக்கிறான். இதனை பார்த்த பெண் ஒருவர் பஞ்சாயத்து உறுப்பினர் உள்ளிட்டோர் வாயிலாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போது அவர்கள் வந்து விசாரித்த போது சிறுவனை பலமுறை அவரின் தாய் சூடு வைத்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாய் மீது குமுளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.