ம.பி: ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு..!


ம.பி: ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு..!
x
தினத்தந்தி 18 July 2022 9:24 AM GMT (Updated: 18 July 2022 9:32 AM GMT)

மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் இருந்து மராட்டிய மாநிலம் புனே நகர் நோக்கி மராட்டிய அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதில் 55 பேர் பயணம் செய்துள்ளனர்.

மத்திய பிரதேசம், தார் மாவட்டம் கல்கோட்டில் உள்ள நர்மதை ஆற்று பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் ஆற்றில் மூழ்கி 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மத்திய பிரதேச மாநிலம், தார் பகுதியில் நடந்த பஸ் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்து உள்ளார். அதன்படி, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.


Next Story