ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி மாணவி தூக்கு போட்டு தற்கொலை; ஒரு மாதத்தில் 3-வது சம்பவம்


ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி மாணவி தூக்கு போட்டு தற்கொலை; ஒரு மாதத்தில் 3-வது சம்பவம்
x
தினத்தந்தி 13 Sep 2023 10:16 AM GMT (Updated: 13 Sep 2023 4:34 PM GMT)

ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோட்டா,

ராஜஸ்தானின் கோட்டா நகரில் விக்யான் நகர் காவல் நிலையம் அருகே எலெக்ட்ரானிக் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ரிச்சா சிங் (வயது 16) என்ற மாணவி தங்கி நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.

ஜார்க்கண்டின் ராஞ்சி நகரை சேர்ந்த அவர், திடீரென நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை விக்யான் நகர் காவல் நிலையத்தின் அதிகாரி தேவேஷ் பரத்வாஜ் தெரிவித்து உள்ளார்.

ராஜஸ்தான் மந்திரி பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கடந்த ஆகஸ்டில் கூறும்போது, கோட்டா நகர் பயிற்சி மையங்களில் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இதுபோன்ற பயிற்சி மையங்கள் நடைபெறுகின்றன என அவர் கூறியுள்ளார். மாபியா கும்பல் போன்று அவை செயல்படுகின்றன என்றும் இதற்கு எதிராக காங்கிரஸ் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.

ராஜஸ்தானின் கோட்டா நகரில், கடந்த ஆகஸ்டு இறுதியில் நீட் தேர்வு பயிற்சிக்காக தங்கி, படித்த வெளிமாநில மாணவர்கள் 2 பேர் பயிற்சி மையத்தில் தேர்வை எழுதிய பின்னர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்கள் சேருகின்றனர். எனினும், கடந்த ஆண்டு கோட்டாவில் 15 பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்தனர். நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது.

கூடுதல் செய்திக்கு...

ராஜஸ்தானில் பரபரப்பு; நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் 2 பேர் அடுத்தடுத்து தற்கொலை



Next Story