இந்தியா பார்த்துள்ள ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திர முறைகேடு - பினராயி விஜயன் தாக்கு


இந்தியா பார்த்துள்ள ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திர முறைகேடு - பினராயி விஜயன்  தாக்கு
x
தினத்தந்தி 25 March 2024 6:22 PM GMT (Updated: 25 March 2024 6:28 PM GMT)

ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டமான குடியுரிமை திருத்த சட்டத்தை பா.ஜனதா அரசு அமல்படுத்தி இருப்பதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

கண்ணூர்,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் நடந்து வரும் இந்த கூட்டங்களில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

அந்தவகையில் கண்ணூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மத்திய அரசை கடுமையாக சாடினார்.

தனது உரையில் அவர் கூறியதாவது:-

நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க சங் பரிவார் அமைப்புகள் முயற்சிக்கின்றன. நாட்டின் நீதித்துறையை கூட மிரட்டுகின்றன. தேர்தல் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தங்களை பாதித்திருக்கிறது என்பது மத்திய அரசு, பா.ஜனதா மற்றும் சங் பரிவார் அமைப்புகளுக்கு நன்கு தெரியும்.

எனவே இந்த பிரச்சினையை திசை திருப்ப அவர்கள் முயற்சித்தனர். அதற்காக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை கைது செய்து உள்ளனர்.

தேர்தல் பத்திரங்கள் பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டபோதே, அது ஊழலுக்கான கருவியாக இருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்தியா பார்த்துள்ள ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திர முறைகேடு ஆகும். இப்படி அப்பட்டமாக ஊழலில் ஈடுபட அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது? அவர்கள் ஒருபோதும் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்று நினைத்தார்கள். கெஜ்ரிவால் கைதின் மூலம் தாங்கள் சட்டத்துக்கு மேல் என்ற செய்தியை கூற முயற்சிக்கிறார்கள். தங்கள் செயல்திட்டங்களை நிறைவேற்ற எதையும் செய்வோம் என கூற விரும்புகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 2019-ம் ஆண்டு டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருந்தார். இடதுசாரி தலைவர்கள் மட்டுமே டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆலப்புழா எம்.பி. ஆரிப் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேசினார். இப்போது, காங்கிரஸ் தலைவர்கள் தொழில்நுட்ப ரீதியாக இந்த சட்டத்தை எதிர்த்ததாக கூறுகிறார்கள்.

டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சங் பரிவார் அமைப்புகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இதனால் சுமார் 53 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் மாயமாகினர்.

ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டமான குடியுரிமை திருத்த சட்டத்தை பா.ஜனதா அரசு அமல்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.


Next Story