தேசிய கொடியுடன் 5 கோடி 'செல்பி' புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம்: மத்திய அரசு தகவல்


தேசிய கொடியுடன் 5 கோடி செல்பி புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம்: மத்திய அரசு தகவல்
x

தேசிய கொடியுடன் 5 கோடி ‘செல்பி’ புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

இதனிடையே மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றியதை புகைப்படம் எடுத்தும், தேசிய கொடியுடன் 'செல்பி' புகைப்படம் எடுத்தும் 'ஹர் கர் திரங்கா' என்கிற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி மத்திய கலாசார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அப்படி பதிவேற்றம் செய்யும் நபர்களுக்கு அவர்களின் பெயர் மற்றும் முகவரியுடன் மத்திய அரசின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பலரும் வீட்டில் ஏற்றிய தேசியக்கொடியை புகைப்படம் எடுத்தும், தேசிய கொடியுடன் செல்பி புகைப்படம் எடுத்தும் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, சான்றிதழ் பெற்றனர். பின்னர் அந்த சான்றிதழை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி வரையில் 5 கோடி 'செல்பி' புகைப்படங்கள் 'ஹர் கர் திரங்கா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், இது ஒரு பிராமண்ட சாதனை என்றும் மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story