உயர் பதவியில் உள்ள பெண் மீது கற்களை வீசுபவருக்கு பூமாலை போடுகிறார்கள்: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானாவில் உயர் பதவியில் உள்ள பெண் மீது கற்களை வீசுபவருக்கு பூமாலை போடுகிறார்கள் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்து உள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் சர்வதேச மகளிர் தினத்துடன் தொடர்புடைய நிகழ்ச்சி ஒன்று ராஜ் பவனில் நடந்தது. இதில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டீரிய சமிதி கட்சியை இலக்காக கொண்டு பேசினார். அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் கூறும்போது, உயர் பதவியை வகிக்க கூடிய ஒரு பெண்ணை கிண்டல் செய்வதும், அவமதிப்பு செய்வதும் நடக்கிறது. அப்படி உயர் பதவியில் இருப்பவரை கேலி செய்பவர் கவுரவிக்கப்படுகிறார்.
இதுவே தெலுங்கானா மக்களுக்கு அவர்கள் அளிக்கும் செய்தி. மனது வேதனையடைகிறது. இது மிக மிக துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. ஒரு பெண்ணை நோக்கி ஒரு நபர் கற்களை எறிகிறார் என்றால், அவருக்கு நாம் பூமாலை போடுகிறோம் என்றால் தெலுங்கானா பெண்களுக்கு நாம் என்ன செய்தியை வழங்கி கொண்டிருக்கிறோம் என்று அவர் கேட்டுள்ளார்.
அது நானில்லை. நான் ஒவ்வொருவருடனும் இருக்கிறேன். ஒரு பெண், ஒரு குழந்தை, ஒரு நபர் பாதிக்கப்படுகிறார் என்றால், அவர்களுக்கு துணையாக நான் இருப்பேன். நான் அவமதிப்பு செய்யப்படும்போது, பல பெண்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நீங்கள் அனைவரும் என்னுடன் துணை நிற்பதால், நான் ஒரு வலிமையான நபராக நிற்கிறேன் என கூறியுள்ளார். கடந்த ஜனவரியில், எம்.எல்.சி. கவுசிக் ரெட்டி என்பவர், தகாத முறையில் கவர்னர் தமிழிசையை பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. மாநில அரசு ஒப்புதலுக்காக அனுப்பிய மசோதாக்களுக்கு கவர்னர் தமிழிசை அனுமதி அளிக்கவில்லை என குற்றச்சாட்டாக கூறினார்.
அதனுடன், உள்நோக்கத்துடன் அந்த மசோதாக்கள் மீது கவர்னர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்றும் தகாத வார்த்தைகளால் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. கவர்னர் ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க காலதாமதம் ஆன சூழலில், கவுசிக் எம்.எல்.ஏ.க்கள் ஒதுக்கீட்டின்படி, சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டார்.
பெண்களை காயப்படுத்த வேண்டாம். பெண்களின் வலிமை உங்களுக்கு தெரியாது. கண்ணியத்துடன் இருங்கள். அவர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்றும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.