டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு: அபாய அளவை எட்டியதால் கட்டுமான பணிகளுக்கு தடை!
டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து 'மிகவும் மோசம்' என்ற நிலையை தாண்டி ‘அபாய’ அளவில் நீடிக்கிறது.
புதுடெல்லி,
டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து 'மிகவும் மோசம்' என்ற நிலையை தாண்டி 'அபாய'அளவில் நீடிக்கிறது. நேற்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 407 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதாவது கடந்த சில தினங்களை ஒப்பிடுகையில், காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான குறியீட்டில் இருப்பதால், அதிகாலை நேரங்களில் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்குவதிலும், சுவாசிப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த காற்றின் தர மேலாண்மை ஆணையம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணி(செண்டிரல் விஸ்டா திட்டம்) மற்றும் தேச நலனுக்கான அத்தியாவசிய கட்டிட பணிகள் தவிர்த்து பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், மெட்ரோ ரயில் சேவை பணிகள், விமான நிலையம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையங்கள் சார்ந்த கட்டுமான பணிகள்; ரயில் சேவைகள்/நிலையங்கள் சார்ந்த கட்டுமான பணிகள், தேசிய பாதுகாப்பு/பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள்/ திட்டங்கள் சார்ந்த கட்டுமான பணிகள், மருத்துவமனைகள் கட்டுமான பணிகள், நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலம், மேல் பாலம், மின் பரிமாற்றம், குழாய்கள் கட்டுமான பணிகள், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியவற்றிற்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது.