மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மராட்டியத்தில் நடந்த பேரணியில் வன்முறை: கல்வீச்சில் 10 போலீசார் காயம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மராட்டியத்தில் நடந்த பேரணியில் வன்முறை: கல்வீச்சில் 10 போலீசார் காயம்
x

கோப்புப்படம்

மராட்டியத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் 10 போலீசார் காயமடைந்தனர்.

மும்பை,

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் மாலை மராட்டிய மாநிலம் நாசிக், சாதனா பகுதியில் ஏக்லாவ்யா ஆதிவாதி சங்கட்னா மற்றும் சில பழங்குடியின அமைப்பினர், வஞ்சித் பகுஜன் அகாடி சார்பில் பேரணி நடந்தது.

பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். பலர் சட்டை அணியாமல் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம்

பேரணி அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து தொடங்கி தாசில்தார் அலுவலகம் அருகே வந்தது. அப்போது போராட்டக்காரர்களில் சிலர் சாதனா போலீஸ் நிலையம் எதிரே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அந்த பகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. திலீப் போர்சே வாங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் எம்.எல்.ஏ. சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள மும்பை சென்று இருப்பதால், கோரிக்கை மனுவை வாங்க முடியாது என போலீசார் கூறினர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

10 போலீசார் காயம்

இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் திடீரென போலீசாரை நோக்கி சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதில் போலீசார் காயம் அடைந்தனர். மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மீதும் கல்வீசினர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதற்கிடையே போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தால் அந்த பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமாப் கூறுகையில், "இந்த வன்முறை சம்பவத்தில் 10 போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக 21 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். வன்முறை ஏற்பட்டவுடன் கூடுதல் போலீசார் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்றார்.


Next Story