'பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம்' - இந்திய சட்ட ஆணையம் அறிவிப்பு


பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம் - இந்திய சட்ட ஆணையம் அறிவிப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 4 July 2023 3:13 AM GMT (Updated: 4 July 2023 4:27 AM GMT)

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. கருத்து தெரிவிக்க வருகிற 14-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

புதுடெல்லி,

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. கருத்து தெரிவிக்க வருகிற 14-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

பொது சிவில் சட்டம்

திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு, பாதுகாவலர் போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன.

அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

அதேவேளையில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'இருவிதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்' என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சு, எதிர்க்கட்சிகள் மத்தியில் மீண்டும் சூட்டை கிளப்பி உள்ளது.

கருத்து கூறலாம்

இதுபோன்ற சூழ்நிலையில், 22-வது இந்திய சட்ட ஆணையம், நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை பயன்படுத்தும் வகையிலான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கோரி உள்ளது.

இதுதொடர்பாக இந்திய சட்ட ஆணையம் வெளியிட்டு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் 22-வது இந்திய சட்ட ஆணையம் ஒரே மாதிரியான சட்டத்தை பயன்படுத்தும் வகையிலான பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. ஏற்கனவே செயல்பட்ட 21-வது இந்திய சட்ட ஆணையமும் இதுகுறித்து ஆய்வு செய்தது. மேலும், பொதுமக்களிடமும் கருத்து கோரியது.

மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்

அதன்படி 21-வது சட்ட ஆணையம், குடும்ப சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூறியது. பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவு மற்றும் இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இதுதொடர்பாக மீண்டும் ஆய்வு செய்வது என 22-வது இந்திய சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, 22-வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடமும், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடமும் இருந்து கருத்துகளையும், யோசனைகளையும் பெற தீர்மானித்துள்ளது.

எனவே, இந்த சட்டம் தொடர்பாக கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்க விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதிக்குள் membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

விசாரணைக்கு அழைக்கும்

அதுமட்டுமல்லாமல், 'உறுப்பினர் செயலர், இந்திய சட்ட ஆணையம், 4-வது தளம், லோக் நாயக் பவன், கான் மார்க்கெட், புதுடெல்லி-110 003' என்ற முகவரிக்கும் தபால் மூலம் கருத்துகளை அனுப்பிவைக்கலாம்.

https://lawcommissionofindia.nic.in/ என்ற இணையதளத்துக்கு சென்றால் 'பொது சிவில் சட்டம்-பொது அறிவிப்பு' என்ற தலைப்பில் 'லிங்க்' இருக்கும். இதனை கிளிக் செய்தால் வியூ எனப்படும் பைல் இருக்கும்.

இதனை பதிவிறக்கம் செய்யும்போது பொது சிவில் சட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதில் 'கிளிக் கியர்' என இருப்பதை பயன்படுத்தி தங்களது பெயர், செல்போன் எண், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, சொந்த மாவட்டம், மாநிலம் போன்றவற்றை பதிவு செய்து தங்களது கருத்துகளை எழுத்து வடிவில் பி.டி.எப். பைலாக 2 எம்.பி. அளவுக்கு மிகாமல் பதிவேற்றம் செய்யலாம்.

இல்லாதபட்சத்தில் அங்கேயே தங்களது கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்யலாம். தேவைப்பட்டால், தனிப்பட்ட விசாரணை அல்லது கலந்துரையாடலுக்கு எந்தவொரு தனிநபரையும் அல்லது அமைப்பையும் ஆணையம் அழைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story