ரெயில் பயணியின் உடைமை திருட்டு போனால், ரெயில்வே பொறுப்பு ஆகாது சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ரெயிலில் பயணியின் உடைமை திருட்டு போனால் ரெயில்வே பொறுப்பு ஆகாது, அது ரெயில்வேயின் சேவைக்குறைபாடும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
புதுடெல்லி,
சுரேந்தர் போலா என்ற தொழில் அதிபர் காசிவிஸ்வநாத் ரெயிலில் 2005-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 27-ந்தேதியன்று, டெல்லிக்கு பயணம் செய்தார். இது முன்பதிவுப்பயணம் ஆகும்.
ரெயில் பயணத்தின்போது அவர் இடுப்பில் பெல்ட் அணிந்து இருந்திருக்கிறார். அந்தப் பெல்ட்டின் பையில் ரூ.1 லட்சம் பணமும் வைத்திருந்தாராம்.
அதிகாலை 3.30 மணிக்கு அவர் எழுந்தபோது, தனது இடுப்பில் அணிந்திருந்த பெல்ட் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் காலையில் ரெயிலில் இருந்து இறங்கிய பின்னர் அவர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
மேலும், அவர் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் அவர், தனது ரெயில் பயணத்தின்போது இடுப்பு பெல்ட் ரூ.1 லட்சம் பணத்துடன் திருட்டு போய்விட்டதால், அந்த இழப்பை ரெயில்வேதான் ஈடு செய்ய வேண்டும் என்று கோரினார்.
வழக்கை விசாரித்த தேசிய குறைதீர் ஆணையம், அவருக்கு ரெயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு ரெயில்வேக்கு அதிர்ச்சி அளித்தது. உடனே தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் விக்ரம்நாத், அசனுதீன் அமானுல்லா ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணை முடிவில், சுரேந்தர் போலாவுக்கு ரெயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பு அளித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில், "ரெயில் பயணத்தின்போது, தனது உடைமையை பயணி பாதுகாத்துக்கொள்ள முடியாமல், திருட்டு போனால், அதற்கு ரெயில்வே பொறுப்பு ஆகாது. ரெயில் பயணத்தில் திருட்டு போனால், அது ரெயில்வேயின் சேவைக்குறைபாடும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.