வியட்நாமுக்கு 3 நாள் பயணம் மேற்கொள்கிறார் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்


வியட்நாமுக்கு 3 நாள் பயணம் மேற்கொள்கிறார் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
x

Image Courtesy : PTI

ஜூன் 8 முதல் 10 வரை வியட்நாம் நாட்டுக்கு ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜூன் 8 முதல் 10 வரை வியட்நாம் நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது முக்கிய நிகழ்வாக ராஜ்நாத் சிங் 12 அதிவேக பாதுகாப்பு படகுகளை வியட்நாமுக்கு ஒப்படைப்பார் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹனோயில் உள்ள மறைந்த அதிபர் ஹோ சி மின்னின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தமது பயணத்தைத் தொடங்குகிறார். ராஜ்நாத் சிங், வியட்நாம் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் ஃபான் வான் ஜியாங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார், இரு அமைச்சர்களும் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அப்போது ஆய்வு செய்வார்கள்.

இந்த பயணத்தின் போது தொலைத்தொடர்பு பல்கலைக்கழகம் உட்பட வியட்நாமின் பயிற்சி நிறுவனங்களையும் ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார். இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்விலும் அவர் கலந்து கொள்கிறார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் வியட்நாம் அதிபர் நுயென் சுவான் ஃபூக் மற்றும் பிரதமர் திரு பாம் மின் சின் ஆகியோரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story