'தோட்டாக்களின் சத்தம் கேட்ட இடத்தில் இனி ராம சங்கீர்த்தனம் ஒலிக்கும்' - யோகி ஆதித்யநாத்


தோட்டாக்களின் சத்தம் கேட்ட இடத்தில் இனி ராம சங்கீர்த்தனம் ஒலிக்கும் - யோகி ஆதித்யநாத்
x

இனி அயோத்தி நகரம் திருவிழாக்களில் மூழ்கித் திளைக்கும் என உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நெருங்கி வரும் சூழலில் அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இந்த நகரம் ஏன் 'அயோத்தி' என்று அழைக்கப்படுகிறது? இங்கு ஏன் பழமையான பாரம்பரியங்கள் உள்ளன? நமது வேதங்களில் கூட அயோத்தியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நீங்கள் நமது பாரம்பரிய நம்பிக்கைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டால், இந்த நகரத்தின் ஒவ்வொரு செங்கற்களிலும் அந்த பாரம்பரியத்தின் அதிர்வுகளை நீங்கள் உணர்வீர்கள்.

அயோத்தி இனி பக்தர்களுக்கு தரிசனத்திற்காக திறக்கப்படும். இனி அயோத்தி நகரம் திருவிழாக்களில் மூழ்கித் திளைக்கும். அயோத்தியில் இனி தோட்டாக்கள் சீறிப் பாயாது. இங்கு தினசரி வாழ்க்கை இனி ஊரடங்கு உத்தரவால் கட்டுப்படுத்தப்படாது. மாறாக, இங்குள்ள தெருக்களில் ராம சங்கீர்த்தனம் எதிரொலிக்கும்.

ராமர் கோவில் திறப்பு விழாவை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இதற்கான போராட்டத்தின் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய அயராத முயற்சியாலும், வழிகாட்டுதலாலும் இந்த 500 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


Next Story