காண்டம் இலவசம்..! மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை: பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார்
"இலவச காண்டம்கள் கூட வேண்டும் என கூறுவீர்கள்" என்று பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பேசிய காட்சிகள் வெளிவந்தன.
பாட்னா,
பீகாரில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவரிடம் மாணவிகள் பேசிய உரையாடல் அடங்கிய வீடியோ வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில், அதிகாரி கவுரை நோக்கி மாணவிகள் சிலர், எங்களுக்கு இலவச நாப்கின்களை அரசு வழங்க வேண்டும். அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது.அதனால், ரூ.20 முதல் ரூ.30 விலையுள்ள நாப்கின்களை எங்களுக்கு அவர்கள் வழங்க முடியாதா? என்று கேட்டுள்ளனர்.
இதற்கு அதிகாரி ஹர்ஜோத் கவுர், "இந்த கோரிக்கைகளுக்கு ஏதேனும் முடிவு உண்டா? நாளைக்கு நீங்கள், அரசு ஜீன்ஸ் துணிகளை வழங்கலாம். அழகிய காலணிகளை வழங்கலாம் என கூறுவீர்கள்.
முடிவில், குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது, உங்களுக்கு இலவச காண்டம்கள் கூட வேண்டும் என கூறுவீர்கள்." இவ்வாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் தொடர்ந்து பேசிய காட்சிகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியதாவது, "இந்த பிரச்சினை குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாள்கள் மூலம் நான் இந்த விவகாரம் குறித்து அறிந்தேன். மாநில பெண்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உறுதி பூண்டுள்ளோம். ஐஏஎஸ் அதிகாரியின் நடத்தை இதற்கு விரோதமாக இருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதன்பின்பு கவுர் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், "எனது வார்த்தைகள் எந்த பெண்ணின் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் யாரையும் அவமானப்படுத்தவோ, யாருடைய மனதையும் புண்படுத்தவோ விரும்பவில்லை" என தெரிவித்து உள்ளார்.