யானைகள் தாக்கி உயிரிழந்தால் ரூ.15 லட்சம் நிவாரணம்; கர்நாடக அரசு அறிவிப்பு


யானைகள் தாக்கி உயிரிழந்தால் ரூ.15 லட்சம் நிவாரணம்; கர்நாடக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:46 PM GMT)

கர்நாடகத்தில் யானைகள் தாக்கி உயிரிழந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுவதாக சட்டசபையில் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு:

யானைகள் அட்டகாசம்

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தில் மந்திரி உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 9-வது நாள் கூட்டம் நேற்று காலை பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் காகேரி, கேள்வி நேரத்திற்கு அனுமதி வழங்கினார். இந்த கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் எம்.பி.குமாரசாமி, தனது மூடிகெரே தொகுதியில் யானைகள் அட்டகாசம் குறித்து பேசினார். அதற்கு தொழிலாளர் நலத்துறை மந்திரி சிவராம் ஹெப்பார் பதிலளிக்கையில் கூறியதாவது:-

ரூ.15 லட்சமாக உயர்த்த முடிவு

மூடிகெரே தொகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வந்து மக்களுக்கு இடையூறு செய்கின்றன. இந்த தொல்லையை தடுக்கும் நோக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் இதுவரை 74 யானைகள் அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்த தொகுதியில் யானைகள் தாக்கி இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனர்.

யானைகள் உள்பட வன விலங்குகள் தாக்கி உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.7½ லட்சம் வழங்கப்பட்டு வந்தது. அதை தற்போது எங்கள் அரசு ரூ.15 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும் பயிர்கள் சேதம் அடைந்தால் அவற்றுக்கும் நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று (நேற்று முன்தினம்) தெரிவித்துள்ளார். ஹாசன் மாவட்டத்தில் வனப்பகுதியின் எல்லையில் 9½ கிலோ மீட்டர் நீளத்திற்கு கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன. மேலும் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு கம்பி வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊருக்குள் வந்து தொல்லை

யானைகள் ஊருக்குள் வருவதை முன்கூட்டியே அறியும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானைகளை அழிக்க வேண்டும் என்று உறுப்பினர் சொல்கிறார். அது சாத்தியமில்லை. யானைகள் ஊருக்குள் வருவதை வேண்டுமானால் தடுக்க இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மூடிகெரே வனப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட யானை அடிக்கடி ஊருக்குள் வந்து அதிக தொல்லை கொடுப்பதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். அந்த யானையை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு சிவராம் ஹெப்பார் கூறினார்.

அப்போது பேசிய பா.ஜனதா உறுப்பினர் அப்பச்சு ரஞ்சன், "யானைகள் தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்து இருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இந்த யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். இதற்காக ஒரு உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்" என்றார்.


Next Story