பீகார்: விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - பாஜக எம்.பி.
பீகாரில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக எம்.பி சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
பாட்னா,
மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலம் பீகார். இந்த மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
அம்மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான பாஜக இது குறித்து அவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
முன்னதாக பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார், "கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்காது. மது குடித்தால் இறந்துவிடுவீர்கள் என மக்களிடம் நாங்கள் கூறி வருகிறோம். மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக எம்.பி சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
பீகாரின் சரண் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகாரில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மதுவிலக்கு மற்றும் கலால் சட்டத்தின் படி, சரண் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த பிரச்சினையில் மக்களுக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்.
பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு விஷ சாராயம் குடித்த 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் கண் பார்வை இழந்தனர். இந்த வழக்கில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இதேபோல் சரண் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஏன் இழப்பீட வழங்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பீகாரின் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம் பிரிவு 42-ன் படி, கள்ளச்சாராயம் குடித்து இறப்பு ஏற்பட்டால் 4 லட்ச ரூபாயும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 2 லட்ச ரூபாயும், காயம் ஏற்பட்டால் 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை சாராய உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து மாவட்ட நிர்வாகம் வசூலிக்கலாம்.