ஞானவாபி மசூதி வழக்கு: சிவலிங்கம் காணப்பட்டதாக கூறப்படும் பகுதியின் பாதுகாப்பு நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஞானவாபி மசூதி வழக்கு: சிவலிங்கம் காணப்பட்டதாக கூறப்படும் பகுதியின் பாதுகாப்பு நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

Image Courtesy: AFP

ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் காணப்பட்டதாக கூறப்படும் பகுதியின் பாதுகாப்பை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிவில் கோர்ட்டு, ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

கடந்த மே மாதம் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் நடைபெற்றது. அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் ஆட்கள் நுழைய வாரணாசி கோர்ட்டு தடை விதித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும், ஞானவாபி மசூதி வளாகத்திற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்று கடந்த மே மாதம் 17-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவிட்டது. இந்த இடைக்கால உத்தரவு நாளையுடன் (நவம்பர்-12) காலாவதியாகிறது.

இந்த நிலையில், சிவலிங்கம் காணப்பட்டதாகக் கூறப்படும் பகுதிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை நீட்டிக்க கோரி இந்து அமைப்பினர் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவானது தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் பிஎஸ் நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் காணப்பட்டதாக கூறப்படும் பகுதிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மறு உத்தரவு வரும்வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.


Next Story