உமேஷ் பால் கொலை வழக்கு: சினிமா பட பாணியில் உத்தரபிரதேசத்தில் பட்டப்பகலில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
உமேஷ் பால் கொலையில் ஈடுபட்ட உஸ்மான் சவுத்ரி என்பவர் இன்று காவல்துறை என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.
லக்னோ,
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தூமன்கஞ்ச் பகுதியில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அம்மாநிலத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜூ பால் என்பவர் 2005இல் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞரான உமேஷ் பால்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று துமன்கஞ்ச் என்ற இடத்திற்கு தனது காரில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்றிருந்தார். அப்போது துப்பாக்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளுடன் அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டனர். இதனை அறியாத உமேஷ் பால் தனது காரில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த சம்பவத்தால் உமேஷ் பால் மற்றும் அவருக்கு பாதுகாப்பில் இருந்த காவலர் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த கொலை சம்பவம் மாநிலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்த நிலையில், குற்றவாளிகள் ஒருபோதும் தப்ப முடியாது என மாநில சட்டப்பேரவையில் முதல்-மந்திரி யோகி ஆதித்தயநாத் சூளுரைத்தார். உமேஷ் பாலின் மனைவி அளித்த புகாரின் பேரில், முன்னாள் எம்.பி அடிக் அகமது அவரது மனைவி மற்றும் மகன்கள் உள்ளிட்டோர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உமேஷ் பால் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அர்பஸ் என்பவரை கடந்த மாத இறுதியில் போலீசார் என்கவுண்டர் செய்தனர். பிரயக்ராஜ் மாவட்டத்தின் துமாங்கஞ்ச் பகுதியில் வைத்து அர்பசை, போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இந்நிலையில், உமேஷ் பால் கொலையில் ஈடுபட்ட உஸ்மான் சவுத்ரி என்பவர் இன்று காவல்துறை என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.
விஜய் சவுதிரி என்ற உஸ்மானை பிரயாக்ராஜ் மாவட்டத்தில் வைத்து என்கவுண்டர் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். உஸ்மானை கைது செய்ய முயன்ற போது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதன் காரணமாகவே பதில் தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் கூறினர். உமேஷ் பால் கொலைச் சம்பவம் நடந்து 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களை போலீசார் அரங்கேற் இருப்பது ரவுடிகளிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பிரயாக்ராஜ் காவல்துறை ஆணையர் ரமித் சர்மா கூறுகையில், உஸ்மானை பிடிக்க காவல்துறை சென்ற போது கவுந்தியாரா என்ற இடத்தில் மோதல் வெடித்தது. இந்த மோதல் சம்பவத்தில் உஸ்மான் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நபர் தான் உமேஷ் பாலை முதலில் சுட்ட நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துன் உமேஷ் பால் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் பிடிக்க அம்மாநில காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.