சிவசேனா விவகாரம்: தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
மராட்டியத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தான் சிவசேனா கட்சி பெயர், சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.
புதுடெல்லி,
மராட்டியத்தில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். 2 அணிகளும் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்காக உரிமை கோரி வந்தன.
இந்தநிலையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு கட்சியின் வில், அம்பு சின்னத்தையும், பெயரையும் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இது உத்தவ் தாக்கரே மற்றும் அவரது அணியை சேர்ந்தவர்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அவர் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் சிண்டே தரப்பினருக்கு வழங்கி அங்கீகாரம் கொடுத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.