மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட கிராமம்: தினமும் தேசிய கீதம் பாடும் கிராம மக்கள்...!


மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட கிராமம்: தினமும் தேசிய கீதம் பாடும் கிராம மக்கள்...!
x

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட கிராமம் என்ற அடையாளத்தை அழிக்கும் முயற்சியாக கிராம மக்கள் ஒன்றாக இணைந்து தேச கீதம் பாடி தங்களது ஒற்றுமையை நிரூபித்துள்ளனர்.

மும்பை,

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட கிராமம் என்ற அடையாளத்தை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மராட்டியத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள முல்சேராவில் வசிக்கும் கிராம மக்கள் தேசிய கீதத்தை ஒன்றாகப் பாடுவதன் மூலம் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள்.

"இது ஒரு நல்ல முயற்சி. கிராம மக்கள் தேசிய கீதம் பாடுவதன் மூலம் கூட்டு தேசபக்தியின் உணர்வை தினமும் அனுபவிக்கிறார்கள்" என்று கட்சிரோலி காவல் கண்காணிப்பாளர் அங்கித் கோயல் கூறியுள்ளார்.

மும்பையில் இருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முல்சேராவில் சுமார் 2,500 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழங்குடியினர் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மக்கள் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

தெலுங்கானாவின் நெல்கொண்டா கிராமம் மற்றும் மராட்டியத்தின் சாங்லி மாவட்டத்தில் உள்ள பில்வாடி கிராமத்திற்கு அடுத்தபடியாக நாட்டிலேயே மூன்றாவது கிராமமாகவும், மராட்டியத்தில் இரண்டாவது கிராமமாகவும் இந்த நடைமுறையை தொடங்கியுள்ளது என்று மற்றொரு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

தினமும், கிராமத்தில் வசிப்பவர்கள், கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் போலீசார், காலை 8.45 மணிக்கு ஒன்று கூடி, கீதம் பாடுகின்றனர்.

தேசிய கீதம் பாடத் தொடங்கும் போது மக்கள் தங்கள் வாகனங்களை எங்கிருந்தாலும் நிறுத்தி விட்டு அதில் கலந்து கொள்கிறார்கள்.

கிராமத்தில் இயங்கும் இரண்டு அரசுப் போக்குவரத்துப் பேருந்துகள் கூட நிறுத்தப்பட்டு, அதன் ஊழியர்களும் பயணிகளும் இருந்த படியே தேசிய கீதத்தில் இணைந்து விடுகின்றனர்.

பக்கத்து கிராமமான விவேகானந்தபூரும் இந்த நடைமுறையைத் தொடங்கியுள்ளது. அதன் குடியிருப்பாளர்கள் தினமும் காலை 8.45 மணிக்கு தேசிய கீதத்தை பாடுகிறார்கள்.

போலீஸ் அதிகாரிகள் தினமும் இரண்டு ஒலிபெருக்கிகள் மூலம் முல்சேரா மற்றும் விவேகானந்தபூரை சுற்றி ஒரு நிமிடம் தேசபக்தி பாடலை இசைப்பார்கள். தேசிய கீதம் தொடங்கும் என்பதை இது உணர்த்துகிறது.

இது மக்களுக்கு புதிய ஆற்றலை அளித்துள்ளதுடன், அவர்களின் தேசபக்தி உணர்வையும் அதிகரித்துள்ளது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தேசிய கீதம் பாடுவது சகோதரத்துவ உணர்வை அதிகரித்திருப்பதால், சர்ச்சைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, என்றார்.


Next Story