ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை


ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
x

ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிதின் பாஜ்தார்(வயது 18). இவர் சிகார் மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் நிதின் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. அவரது அறை உள்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரிய வந்ததது.

பின்னர் இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று நிதினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உத்யோக்நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் 5-ந்தேதி, நிதின் தங்கியிருந்த அதே விடுதியில் தங்கி 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த கவுஷல் மீனா(வயது 16) என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல், பல்வேறு பயிற்சி மையங்களை கொண்ட ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில், இந்த ஆண்டு மட்டும் இதுவரை 23 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் இதுபோன்ற சூழல்களில் மனநல ஆலோசனைகளைப் பெறுவதற்கான இலவச உதவி எண்களை அழைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.


Next Story