பிரதமர் மோடி அரசு பணத்தில் பிரசாரம் செய்ய சட்டசபை தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை; டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு


பிரதமர் மோடி அரசு பணத்தில் பிரசாரம் செய்ய சட்டசபை தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை; டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
x

பிரதமர் மோடி அரசு பணத்தில் பிரசாரம் செய்வதற்காக தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்று டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியு்ளளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முற்றுகை போராட்டம்

கர்நாடக அரசு, தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் அவர்களை ஏமாற்றுகிறது. இதை கண்டித்து நாளை (இன்று) காலை 10 மணிக்கு கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பா.ஜனதா அரசு கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை. தலித், பழங்குடியினர் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் கர்நாடகத்திடம் இருந்து மத்திய அரசுக்கு எந்த விதமான கோப்பும் வரவில்லை என்று மத்திய மந்திரி தெளிவாக கூறியுள்ளார்.

அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் திருத்தம் செய்யாமல், அந்த மக்களுக்கு நாங்கள் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளோம் என்று பா.ஜனதா தலைவர்கள் சொல்கிறார்கள். இதன் மூலம் அந்த மக்களுக்கு பா.ஜனதா அரசு துரோகம் செய்கிறது. அதனால் நாங்கள் (இன்று) கவர்னரை சந்தித்து நாங்கள் முறையிட உள்ளோம். பா.ஜனதா அரசு கூறும் பொய்களை நம்ப மக்கள் தயாராக இல்லை.

ஆட்சியில் நீடிக்க கூடாது

உண்மையிலேயே தலித்-பழங்குடியின மக்கள் மீது அக்கறை இருந்தால் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் திருத்தம் செய்து இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். மக்களை ஏமாற்றும் பா.ஜனதா அரசு ஆட்சியில் நீடிக்க கூடாது. அதனால் இந்த பா.ஜனதா அரசை கவர்னர் கலைக்க வேண்டும். கர்நாடகத்தில் உள்ள பா.ஜனதாவை சேர்ந்த 26 எம்.பி.க்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?.

இந்த அரசின் கடைசி மந்திரிசபை கூட்டம் நாளை (இன்று) நடக்கிறது. இதில் பஞ்சமசாலி சமூகத்திற்கு முக்கியமான முடிவு எடுப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அரசு எந்த முடிவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளட்டும். அது அந்த மக்களை ஏமாற்றும் செயலாக தான் இருக்கும். கர்நாடகத்தில் இந்த நேரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருக்க வேண்டும்.

அரசு பணத்தில் பிரசாரம்

ஆனால் பிரதமர் மோடி அரசு பணத்தில் பிரசாரம் செய்யவும், விளம்பரம் செய்யவும் தேர்தல் தேதியை அறிவிக்காமல் உள்ளனர். கடந்த முறை முன்கூட்டியே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு குஜராத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் உள்நோக்கத்துடன் நடந்துள்ளது. இதற்கு ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவா்கள் பயப்பட மாட்டார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story