டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 11-ந் தேதி நடக்கிறது


டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 11-ந் தேதி நடக்கிறது
x

கர்நாடக அரசு முறைப்படி தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை சரியாக வழங்கவில்லை.

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் 22-வது கூட்டம் வருகிற 11-ந் தேதி டெல்லியில் நடக்கிறது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்துக்கான அழைப்பு அவர்களுக்கு விடுக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக அரசு முறைப்படி தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை சரியாக வழங்கவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 2 முறை டெல்லி வந்து மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து வலியுறுத்தினார். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கடிதமும் அவரிடம் அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. அதன்பேரில் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடக துணை முதல்-மந்திரி சிவகுமார் தெரிவித்தார். இதற்கிடையே மழையும் பெய்தது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் முழுமையான அளவில் தண்ணீர் வரவில்லை. இந்த நிலையில் ஆணைய கூட்டம் 11-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாடு அதிகாரிகள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.


Next Story