பெங்களூருவில் 77 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வெப்பநிலை


பெங்களூருவில் 77 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வெப்பநிலை
x

கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் பெங்களூருவில் 77 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் நகரவாசிகள் கடும் குளிரில் நடுங்கி வருகிறார்கள்.

மாவட்ட செய்திகள்

பெங்களூரு:

கடும் குளிர்

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. பெங்களூரு நகரில் கடந்த 17-ந்தேதி இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இந்த மழை பெங்களூரு நகரில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு பெங்களூரு நகரில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

ஆனால் எப்போதும் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. சூரியன் தென்படவில்லை. கடுமையான குளிர் நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. மலை பிரதேசங்களில் இருப்பது போன்ற சீதோஷ்ண நிலை பெங்களூருவில் நிலவி வருகிறது.

குறைந்த வெப்பநிலை

இதுபோன்ற சூழ்நிலையால் பெங்களூரு நகரில் குறைந்தளவு வெப்பநிலையே பதிவாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரு நகரில் கடந்த 77 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை பதிவாகி உள்ளது. அதாவது, நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு பெங்களூரு நகரில் 64.22 டிகிரி வெப்பநிலையே பதிவாகி இருந்தது. கடந்த 1945-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி பெங்களூரு நகரில் 62 டிகிரி வெப்பநிலை பதிவாகி இருந்தது. அதன்பிறகு தற்போது தான் குறைந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக பெங்களூரு நகர மக்கள் கடுமையான குளிரில் நடுங்கி வருகிறார்கள்.இதற்கிடையே, வருகிற 24-ந்தேதி வரை பெங்களூரு நகரில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும், அதிகபட்சமாக 78 டிகிரி முதல் குறைந்தபட்சம் 68 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை

பெங்களூருவில் மழை பெய்யாவிட்டாலும் மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சிவமொக்கா, கோலார், தாவணகெரே, பல்லாரி, கொப்பல், ஹாவேரி, ராய்ச்சூர், தார்வார் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் 215 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சிவமொக்காவில் அதிக மழை பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை

இதேபோல், மாநிலத்தில் பல்வேறு கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளது.

கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story