கண்ணாமூச்சி விளையாடிய சிறுமி லிப்ட் விபத்தில் சிக்கி பலியான சோகம்


கண்ணாமூச்சி விளையாடிய சிறுமி லிப்ட் விபத்தில் சிக்கி பலியான சோகம்
x

மராட்டியத்தில் பாட்டி வீட்டுக்கு சென்ற சிறுமி கண்ணாமூச்சி விளையாடும்போது, லிப்ட் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.



புனே,


மராட்டியத்தின் மும்பை நகரில் மான்குர்த் பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு ரேஷ்மா கராவி என்ற 16 வயது சிறுமி தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அவர் நண்பர்களுடன் சேர்ந்து, சென்ற இடத்தில் கண்ணாமூச்சி விளையாடி உள்ளார்.

இதில், தனது முறை வந்தபோது, நண்பர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டி ரேஷ்மா அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இந்த நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் ஜன்னல் போன்ற திறந்த பகுதி ஒன்று இருந்துள்ளது.

ஒரு வேளை தனது நண்பர்கள் அந்த பகுதியில் ஒளிந்திருக்க கூடும் என நினைத்த ரேஷ்மா, அதற்குள் தலையை நுழைத்து பார்த்து உள்ளார். ஆனால் அந்த நேரத்தில், லிப்ட் கீழ் நோக்கி அந்த பகுதியில் வந்து கொண்டு இருந்துள்ளது.

இதனை கவனிக்காத ரேஷ்மா தலையில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் ரேஷ்மா காயமடைந்து, உயிரிழந்து உள்ளார். அந்த குடியிருப்பின் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டு உள்ளனர் என ரேஷ்மாவின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

ரேஷ்மாவின் தந்தை ரவி கராவி கூறும்போது, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல், அந்த திறந்த பகுதியை கண்ணாடி கொண்டு மூடி வைத்திருக்க வேண்டும். குடியிருப்பு காலனியின் விவகாரங்களை கவனிக்கும் அதிகாரிகள் அலட்சியமுடன் இருந்துள்ளனர் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீட்டு வசதி காலனியின் தலைவர் மற்றும் செயலாளரை மான்குர்த் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 26-ந்தேதி தென்கிழக்கு டெல்லியின் ஜைத்பூர் பகுதியில், கட்டிடத்தின் லிப்ட் ஒன்று சேதமடைந்து, திடீரென அறுந்து விழுந்ததில் 44 வயது நபர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்தில், அவருடைய மகன் காயம் அடைந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


Next Story