314 ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு


314 ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு
x

314 ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை,

திருப்பதியை அடுத்த நரசிங்கபுரத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் ஆயுர்வேத மருந்தகம் செயல்பட்டு வருகிறது. அங்கு மருந்துகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கூடுதலாக மருந்துகள் தயாரிக்க போதிய இட வசதி இல்லாததால், ஆயுர்வேத மருந்தகத்தில் கூடுதலாக கொட்டகைகள் அமைக்கும் பணிகளும், அதில் எந்திரங்கள் பொருத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. அந்தப் பணிகளை தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது:-

திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் தற்போது 30 வகையான மருந்துகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. நோயாளிகளுக்கு நவீன மருத்துவத்தை வழங்குவதற்காக, கூடுதலாக 314 வகையான மருந்துகளை தயாரிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதற்காக, மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. அனுமதி பெறப்பட்ட 314 மருந்துகளும் விரைவில் தயாரிக்கப்படும்.

அதற்காக ரூ.5 கோடியில் கூடுதல் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, அதில் மருந்தகம் உருவாக்கப்படுகிறது. மருந்தகத்தில் மருந்துகள் தயாரிக்க தேவையான அதிநவீன எந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்ததும், கொட்டகைகள் வருகிற 31-ந்தேதி திறக்கப்படும். திறக்கப்பட்ட புதிய கொட்டகையில் அன்றே முதல் கட்டமாக 10 வகையான மருந்துகள் தயாரிக்கப்படும்.

திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு எஸ்.வி. ஆயுர்வேத மருந்தகத்தில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் வழங்குவதைத் தவிர, மருந்துகளின் உற்பத்தி செலவில் 50 சதவீதத்தை அரசே செலுத்த ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என்று அவர் பேசினார்.


Next Story