நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள 32 மசோதாக்கள்; 2 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றம்!


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள 32 மசோதாக்கள்; 2 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றம்!
x

கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பல்வேறு நாட்கள் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கியது. அதில் அக்னிபாத் திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகியது. கடந்த வாரம் முழுவதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பல்வேறு நாட்கள் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 32 மசோதா நிறைவேற்றப்படாமல் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இரண்டு வாரங்கள் முடிவடைந்து விட்டன. அதில் மக்களவை 14 மணி நேரம் மட்டுமே செயல்பட்டு உள்ளது எனவும் மாநிலங்களவை 11 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு நாள் சராசரியாக 6 மணி நேரம் இரு அவைகளும் செயல்படும். ஆனால் பல்வேறு எதிர்ப்பு காரணமாக அவ்வப்போது இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த கூட்டத்தொடரில் நான்கு மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 23 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திலேயே காந்தி சிலை முன்பு 50 மணி நேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரண்டு மசோதாக்கள் மட்டுமே மக்களவையில் இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 27 எம்.பி.க்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வதன் மூலம், மோடி அரசு எதிர்க்கட்சிகள் போராட்டம் பண்ண விடாமலும், நாட்டில் உள்ள பிரச்சனைகளை எழுப்ப விடாமலும் கேள்வி கேட்க விடாமலும் தடுக்கிறது என்பது தெளிவாகிறது என்றார். 


Next Story