புதுவை சர்வதேச பூச்சியியல் மருத்துவ பயிற்சி நிறுவன புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா


புதுவை  சர்வதேச பூச்சியியல் மருத்துவ பயிற்சி நிறுவன புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
x

சர்வதேச பூச்சியியல் மருத்துவ பயிற்சி நிறுவனத்துக்கு புதிய கட்டிடம் கட்ட மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.

புதிய கட்டிடம்

புதுவை கோரிமேட்டில் உள்ள நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச பூச்சியியல் மருத்துவ பயிற்சி நிறுவனத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அஸ்வனிகுமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:-

கொரோனா சவால்

கொசுவினால் பரவும் நோய்களை நாம் விரட்டி வருகிறோம். அதேபோல் காசநோய் உள்ளிட்ட நோய்களை விரட்ட வேண்டும். இப்போது நமக்கு கொரோனா தொற்று பெரிய சவாலாக இருந்தது. அதற்கு மருந்து கண்டுபிடிப்பதும் சவாலாக இருந்தது.

நமது பிரதமர் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொண்டார். அவர்களும் கடுமையாக உழைத்து மருந்தை கண்டுபிடித்தார்கள். அதன் காரணமாக கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி

நாம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு கொரோனா தொற்று தடுப்பூசியை வழங்கி உள்ளோம். ஆராய்ச்சியும், அறிவும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவை. புதுவை ஆராய்ச்சி கேந்திரமாக மாறும். புதுவை அழகான மாநிலம். இதற்காக முதல்-அமைச்சருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேசினார்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களை பற்றிய ஆராய்ச்சி என்பது நாட்டிற்கு மிகப்பெரிய சேவையாகும். போரினால் இறப்பவர்களை விட நோய்க்கடத்திகள் மூலமாக பரவும் நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

புதுவை நிறுவனத்தில் நடந்து வரும் ஆராய்ச்சிகள் மூலம் பூச்சியியல் தொடர்பான ஆய்வுக்களம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் காரணமாகத் தான் நாம் இப்போது முகக்கவசம் அணியாமல் இருக்க முடிகிறது. கொரோனா தொற்று பரவலின்போது நடந்த காணொலி கூட்டங்கள் மூலமாக தொற்றை கட்டுப்படுத்துவதற்கான சூழல் ஏற்பட்டது.

அதன் பயனாக பிரதமரும், பெருந்தொற்று மேலாண்மையும் என்ற புத்தகத்தையும் எழுத முடிந்தது. பெருந்தொற்றை சமாளிக்க மத்திய அரசிடமிருந்து கிடைத்த உதவிகளை அதில் குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

ரங்கசாமி

முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்தவர்கள் பலரும் மிக உயர்ந்த நிலையில் உள்ளனர். இங்கு சிறந்த ஆராய்ச்சிக்கூடமும் உள்ளது. தொடர்ந்து எடுத்த முயற்சிகளின் வாயிலாக யானைக்கால் நோயும் ஒழிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிகள் என்பது ஒருபோதும் முடிந்துவிடக்கூடாது. தொடர்ந்து நடைபெறவேண்டும். அவ்வப்போது புதிது புதிதாக தொற்றுகள் வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அச்சத்தை போக்கவேண்டியது ஆராய்ச்சியாளர்களின் கடமை.

பாராட்டு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் தெரியும். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் எடுத்த நடவடிக்கைகளை பாராட்ட வேண்டிய நிலையில் உள்ளேன்.

அதிக மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். மற்ற நாடுகளைப்போல் இங்கு உயிர்ச்சேதமும் இல்லை. இதற்காக நாம் ஆராய்ச்சியாளர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ., இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story