மேற்கு வங்காள பா.ஜ.க. பேரணியில் பங்கேற்க சென்ற எதிர்க்கட்சி தலைவர், பெண் எம்.பி. கைது


மேற்கு வங்காள பா.ஜ.க. பேரணியில் பங்கேற்க சென்ற எதிர்க்கட்சி தலைவர், பெண் எம்.பி. கைது
x

மேற்கு வங்காளத்தில் சர்வாதிகார போக்கை மம்தா பானர்ஜி கையாளுகிறார் என கூறிய பா.ஜ.க. எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் பெண் எம்.பி. உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ராணிகஞ்ச்,



மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அரசுக்கு எதிராக கொல்கத்தா நகரில் பா.ஜ.க. சார்பில் நபன்னா அபியான் என்ற பெயரில் பேரணி ஒன்று நடத்த முடிவானது.

இந்த பேரணியில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் கொல்கத்தா நகருக்கு படையெடுத்தனர். எனினும், அவர்களை பல இடங்களில் போலீசார் வரவிடாமல் தடுத்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில், ராணிகஞ்ச் ரெயில் நிலையத்திற்கு வெளியே பா.ஜ.க. தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதனால், தொண்டர்கள் பலரை போலீசார் தடுப்பு காவலுக்கு கொண்டு சென்றனர்.

இதேபோன்று கொல்கத்தா செல்வதற்காக போல்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த அக்கட்சி தொண்டர்களையும் போலீசார் தடுத்தபோது மோதல் வெடித்துள்ளது. இதில், தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

அபிஜித் தத்தா என்ற பா.ஜ.க. மூத்த தலைவர் கூறும்போது, துர்காப்பூர் ரெயில் நிலையம் அருகே எங்களுடைய 20 தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ரெயில் நிலையம் செல்வதற்கான வழிகளையும் அவர்கள் அடைத்து விட்டனர். இதனால், வேறு சில வழிகளை பயன்படுத்தி நான் வந்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

இந்த பேரணியை தடுப்பதற்காக கொல்கத்தா எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோன்று ஹவுரா நகரின் முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்த வழியில், தடுப்பு வேலிகளை அமைத்து வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி கூறும்போது, மக்கள் ஆதரவு முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு இல்லை. அதனால், சர்வாதிகார போக்கை அவர் கையாளுகிறார். வடகொரியா போன்று வங்காளம் உள்ளது. நேற்றில் இருந்து போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் விலை கொடுப்பார்கள். பா.ஜ.க. வந்து கொண்டிருக்கிறது என கூறினார்.

இதனை தொடர்ந்து, பா.ஜ.க. பேரணியில் கலந்து கொள்ள சென்ற சுவேந்து அதிகாரி, ராகுல் சின்கா மற்றும் எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை லால்பஜாரில் உள்ள கொல்கத்தா காவல் துறை தலைமையகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.


Next Story