அதானிக்கு பின்னால் யார்? பதில் சொல்லுங்கள் மோடி: ராகுல்காந்தி கேள்வி
அதானி பின்னால் இருக்கும் சக்தி யார் என பிரதமர் மோடி பதிலளிக்க வீடியோ மூலம் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
மோடி குறித்து அவதூறாக பேசியதாக, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, அவருக்கு மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து அவர் சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கிற்கான தீர்ப்பை நீதிமன்றம், ஏப்ரல் 20ஆம் தேதி ஒத்தி வைத்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் என்று பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். துறைமுகம், மின்சாரம், நிலக்கரி, சூரிய ஒளி, மின் திட்டம் போன்றவை அதானி வசம் சென்றது எப்படி? என கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வரும் நிலையில் ராகுல்காந்தி டுவீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.